கன்னியாகுமரி:நாகர்கோவில், கன்னியாகுமரி, திங்கள் நகர், திருவட்டார், படந்தாலுமூடு, மார்த்தாண்டம் என மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் அரசு பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து அந்தந்த பகுதிகளுக்குத் தேவையான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அண்மைக் காலமாகவே, சாதாரண மழை பெய்தால் கூட பேருந்துகளில் குடை பிடித்து பயணம் செய்ய வேண்டிய அளவில் தான் அரசு பேருந்துகளின் தரம் உள்ளது. மேலும், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது பேருந்து இருக்கை உடைந்து விழுந்து, சில தொடர் விபத்துகளும் நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமன்றி, பேருந்துகள் அடிக்கடி ப்ரேக் (Break) பிடிக்காமல் விபத்து ஏற்படுவதும், டயர் பஞ்சராகி வழியில் நிற்பதும், செல்ப் மோட்டர் இல்லாமல் பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்வதும் அடிக்கடி நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இப்படி நடப்பதால் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் தரம் குறைவானதாக உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.