கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம், சுருளோடு அருகே ரப்பர் தோட்டம் ஒன்றில் அப்பகுதி தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்த அரிய வகை 13 அடி நீளம் உள்ள ராஜ நாகப்பாம்பை இரண்டு மணி நேரம் போராடி வனத்துறையினர் உயிருடன் பிடித்து பெருஞ்சாணி அணை மலைப்பகுதியில் கொண்டுவிட்டனர். இதனால் ரப்பர் தோட்டத்தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், சுருளோடு அருகே முளையரைப் பகுதியில் ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. தொழிலாளர்கள் தோட்டங்களில் சென்று ரப்பர் மரங்களில் பால் வெட்டுதல், பால் பதப்படுத்துதல் உள்ளிட்டப் பணிகளை தினசரி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ரப்பர் தோட்டத்திற்குள் ராஜநாகப்பாம்பு சுற்றி திரிவதைப்பார்த்த ரப்பர் தோட்டத்தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.