கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகேயுள்ள காணிமடத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (29) அஞ்சுகிராம பேரூராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளர்களை மேற்பார்வை செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் முருகன் (33) தெற்கு பஜாரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
புது ஆடை எடுக்க திட்டம்
இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது, ராஜேஸ்வரி 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். கரோனா தொற்று பொது முடக்கத்தால் கடந்த ஒரு வருடமாக தொழில் சரியாக இல்லாமல் முருகன் மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஜன.20) இவர்களது திருமண நாளை முன்னிட்டு புது ஆடை எடுப்பதற்கு முருகன் திட்டமிட்டுள்ளார்.
தற்கொலை
ஆனால் போதிய அளவு பணம் இல்லாததால், புது ஆடை எடுக்க முடியவில்லை. இதனால், மிகவும் வருத்தத்தில் இருந்த முருகன் நேற்று மாலை மாடியில் உள்ள அறைக்குச் சென்று அறையை பூட்டி தாழிட்டுக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து மனைவி ராஜேஸ்வரி அவரை தேடி மாடிக்குச் சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்
மருத்துவமனையில் அனுமதி
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி கூச்சலிட்டுள்ளார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து முருகனை மீட்டு அஞ்சுகிராமம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ராஜேஸ்வரி அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நாளில் புது ஆடை எடுக்க முடியாமல் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஆணுறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் சாலையில் கிடந்த இளைஞர்!