நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 6 மாத குழந்தையை கடத்திச் சென்ற பெண் கன்னியாகுமரி:நெல்லை மாவட்டம், வள்ளியூர் பூங்கா நகர், நரிக்குறவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா. இவரது மனைவி ஜோதிகா. இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பாசி மணிகள் விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரம் முடிந்தவுடன் இரவு வடசேரி பேருந்து நிலையத்தில் தங்குவது வழக்கம்.
இந்த நிலையில், இவர்கள் நேற்று முன்தினம் (ஜூலை 24) தூங்கிக் கொண்டிருந்தனர். பின்னர், அதிகாலையில் கண்விழித்து பார்த்தபோது, குழத்தையைக் காணவில்லை. இதனால் முத்துராஜ் மற்றும் அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், வடசேரி பேருந்து நிலையம் முழுவதும் தேடி உள்ளனர். ஆனால், எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
இதையும் படிங்க:சென்னை வரசித்தி விநாயகர் கோயிலுக்கு 3 மாதங்களில் அறங்காவலர்களை நியமிக்க உத்தரவு!
இதனால் பதறிப் போன முத்துராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் உடனடியாக இது குறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பேருந்து நிலைத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, அதில் பெண் ஒருவர் வருவதும், தூங்கிக் கொண்டு இருந்த முத்துராஜ் மற்றும் அவரது மனைவி அருகில் நிற்பதும், பின்னர் 6 மாத பெண் குழந்தையை எடுத்துச் செல்வதுமான காட்சி பதிவாகி இருந்தது. இதனையடுத்து கன்னியாகுமரி செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. எனவே, குழந்தையை கன்னியாகுமரிக்கு கொண்டு சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல் துறையினர் கன்னியாகுமரி பேருந்து நிலையம், ரயில் நிலையம் என தேடினர்.
இதன் அடிப்படையில், ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அந்த பெண்மணி நான்கு வயது குழந்தையுடன் நள்ளிரவு நேரத்தில் திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் ஏறியது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த பெண் யார்? ஏதற்காக குழந்தையை கடத்தினார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டும், அந்தப் பெண்ணை தேடியும் வருகின்றனர். மேலும், 6 மாத குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் உச்சபட்சம்? மக்களவையில் அறிக்கை தாக்கல்!