காஞ்சிபுரம்:திருப்பருத்திக்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஸ்ரீதர், 2017ஆம் ஆண்டு கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டார்.
மறைந்த ரவுடி... இரு கோஷ்டிகளாகப் பிரிந்த கூட்டாளிகள்
அவரது மறைவுக்குப் பிறகு காஞ்சிபுரத்தில் ஸ்ரீதர் போல கோலோச்ச வேண்டும் என மறைந்த ஸ்ரீதரின் கூட்டாளிகளான தனிகா, தினேஷ் இருவரும் உறுதியேற்று, இரு கோஷ்டிகளாக இருவரும் உருவெடுத்துள்ளனர். இதில் இவர்களுக்குள் கடும் மோதல் ஏற்பட்டது.
இதனால் அவ்வப்போது இவர்களிடையே மோதல் ஏற்பட்டு, கொலைகளும், கொலை முயற்சிகளும் அரங்கேறி வந்துள்ளன. மேலும் மறைந்த ரவுடி ஸ்ரீதரை போலவே ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் சமீப நாள்களாகவே காஞ்சிபுரத்தில் உள்ள தொழில் அதிபர்களையும், வசதி படைத்தோரையும் லட்சக்கணக்கில் பணம் கேட்டு தொலைப்பேசியில் மிரட்டி வந்துள்ளனர்.
சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய ரவுடி கும்பல் அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள சாலை தெரு பகுதியில் ’வீரலட்சுமி’ எனும் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் ஸ்ரீராம் என்பவரிடம் மறைந்த ஸ்ரீதரின் அடியாட்கள் லட்சக்கணக்கில் மாமூல் கேட்டு கடந்த சில மாதங்களாக மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
சூறையாடப்பட்ட சூப்பர் மார்க்கெட்!
அதற்கு அவர் உடன்படாத நிலையில், ஸ்ரீதரின் ஆதரவாளர்களான எட்டு பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒன்று சூப்பர் மார்க்கெட்டில் திடீரென நுழைந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியைக் கொண்டு கண்மூடித்தனமாகக் கடையில் உள்ள பொருள்களைத் தாக்கி விட்டு கடையை சூறையாடியுள்ளனர்.
இதில், சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து வெளியேறிய நிலையில், தொடர்ந்து அக்கும்பல் கடையை சூறையாடிவிட்டு தப்பிச்சென்றது.
இந்நிலையில், இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், சூப்பர் மார்க்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியுடன் தாக்குதலில் ஈடுபட்ட ரவுடி கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயில் நகரமா..? கொலை நகரமா..?
மேலும் சூப்பர் மார்க்கெட்டில் தாக்குதல் நடைபெறும் முன்பாக ஸ்ரீதரின் கூட்டாளியான ஏட்டுப் பிரபு என்பவரின் வீட்டுக்குச் சென்ற மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியான தினேஷ் ஆதரவாளர்கள், அவரது இரண்டு மகன்களான கமலேஷ், ஜனார்த்தன் ஆகிய இரண்டு சிறுவர்களையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் காயமடைந்த இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய பின்னர் சிறுவாக்கம் பகுதியில் ராஜமன்னார், வெங்கடேசன் ஆகிய இரண்டு பேரையும் வெட்டிச் சென்றுள்ளனர்.
மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதருக்குப் பிறகு அவரது ஆதரவாளர்களிடையே ஏற்படும் கோஷ்டி மோதலால் கோயில் நகரம் கொலை நகரமாக மாறி வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் காவல்துறை இது போன்ற ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - தேடப்பட்ட மருத்துவர் கைது