தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரி பகவதி அம்மன் கிழக்கு வாசலைத் திறக்க வேண்டும் - கலாசாரத் துறை அமைச்சர்

எவ்வளவோ தொழில்நுட்பம் வந்துவிட்ட பிறகும் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலின் கிழக்கு வாசல் கதவு இன்றுவரை மூடியே இருக்கிறது. கோயில் கிழக்குவாசல் கதவைத் திறக்க வேண்டும் என மத்திய கலாசாரத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி கூறியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி
மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி

By

Published : Dec 25, 2021, 12:06 PM IST

காஞ்சிபுரம்:நேற்று (டிசம்பர் 24) மீனாட்சி லேகி, காஞ்சிபுரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கைலாசநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், ஆலய வளாகத்தில் உள்ள சிற்பங்களின் கலை நுணுக்கங்களையும் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 35 ஆயிரம் கோயில்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருந்துவருகிறது.

கோயிலின் கிழக்கு வாசலைத் திறக்க வேண்டும்

உதாரணமாக, கன்னியாகுமரி கோயிலையும் சொல்லலாம்; கன்னியாகுமரி பகவதி அம்மன் அணிந்திருந்த மூக்குத்தியிலிருந்து வரும் ஒளியானது கடலில் கப்பல்கள் செல்ல இடையூறாக இருக்கிறது என 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் அக்கோயிலின் கிழக்கு வாசலை மூடியிருக்கிறார்கள்.

தற்போது எவ்வளவோ தொழில்நுட்பம் வந்துவிட்ட பிறகும் கோயிலின் கிழக்கு வாசல் கதவு, இன்றுவரை மூடியே இருக்கிறது. கோயில் கிழக்குவாசல் கதவைத் திறக்க வேண்டும். கன்னியாகுமரி ஊராட்சி நிர்வாகத்துக்கு மத்திய அரசின் சுற்றுலாத் துறை மூலம் நகரை அழகுபடுத்துவதற்கென நிதி அனுப்பப்பட்டிருந்தது.

அந்நிதியைப் பயன்படுத்தி கன்னியாகுமரியில் போதுமான வசதிகள் செய்யப்படாமல் டைல்ஸ் மட்டுமே பதித்திருக்கிறார்கள். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் ஐந்தாயிரம் கோயில்கள் இருந்தாலும் அதை முறையாகக் கண்காணித்துத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கிறோம். மேலும் என்னென்ன தேவைப்படும் என்பதை அறியவே காஞ்சிபுரம் வருகைதந்துள்ளேன்.

உதவிகள் தேவைப்பட்டால் உடனே தொடர்புகொள்ளலாம்

காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களின் வரலாறுகளும், கலைச்சிற்பங்களும் வியக்கத்தக்கவையாகவே இருக்கின்றன. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் ஆகியனவற்றுக்கு இதுவரை அறங்காவலர்கள்கூட நியமிக்கப்படவில்லை. இக்கோயில்களுக்கு ஏதேனும் உதவிகளோ அல்லது வசதிகளோ தேவைப்பட்டாலும் கடிதம் மூலம் என்னைத் தொடர்புகொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில் ஆகிய இடங்களில் மீனாட்சி லேகி சாமி தரிசனம் செய்தார். அப்போது, தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் மு. காளி முத்தன், உதவிப் பொறியாளர் தி. சரவணன், ஆய்வாளர் ஆர். ரமேஷ், வரதராஜப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் ந. தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி கைலாசநாதர் கோயிலில் சாமி தரிசனம்

இதையும் படிங்க: Christmas Celebration: காஞ்சி இதய அன்னை ஆலயத்தில் சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details