தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 3, 2022, 10:11 PM IST

ETV Bharat / state

கஞ்சா போதையில் காவலரைத் தாக்கிய இளைஞர்கள் கைது

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவலரை கஞ்சா போதையில் தாக்கிவிட்டு தப்பியோடியவர்களை 24 மணி நேரத்திற்குள்ளாகவே சிவகாஞ்சி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat கஞ்சா போதையில் காவலரை தாக்கிய இளைஞர்கள் கைது
Etv Bharat கஞ்சா போதையில் காவலரை தாக்கிய இளைஞர்கள் கைது

காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை பிரிவில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வருபவர் சேகர். இவர் நேற்று (ஆக. 02) மாலை பெரிய காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோயில் அருகேவுள்ள செங்கழுநீரோடை வீதி சந்திப்பில் போக்குவரத்தைச்சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அதிவேகமாக எதிர்திசையில் வந்த ஆட்டோவை நிறுத்தி, அதிலிருந்த இளைஞர்களிடம் பொறுமையாக செல்லும்படி கேட்டுள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் போக்குவரத்து காவலர் சேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் திடீரென சேகரை கற்கள் மற்றும் கட்டையால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

கஞ்சா போதையிலிருந்த இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதில் கைகளில் காயமடைந்து, நிலை குலைந்துபோன போக்குவரத்து காவலர் சேகரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி காவல் துறையினர், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றினர்.

அதில் இரவு நேரம் என்பதால் அடையாளம் கண்டறிய முடியாத காட்சிகளாக இருந்தபோதிலும் அந்நபர்களின் உடல் பாவனைகள் கொண்டு போதை இளைஞர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், தீபக் என்ற புல்லட் தீபக் (28), முகமது சாகீர் (24) ஆகிய இருவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் போக்குவரத்து காவலரை தாக்கியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இத்தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்றாவது இளைஞர் எவ்வித தாக்குதல்களிலும் ஈடுபடாதது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

கஞ்சா போதையில் காவலரை தாக்கிய இளைஞர்கள் கைது

போக்குவரத்து காவலரை தாக்கிய சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே அடையாளம் காண முடியாத கஞ்சா போதை ஆசாமிகளை உடல் பாவனைகளை வைத்து கைது செய்த சிவகாஞ்சி காவல் துறையினரின் இத்தகைய நடவடிக்கை அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்ற 4 பேருக்கு சிறைத்தண்டனை!

ABOUT THE AUTHOR

...view details