காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனாவைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா தொற்றுக்கு சித்தவைத்திய சிகிச்சையில் உயிரிழப்பு குறைவாக உள்ளதால் தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் கரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தினை திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் - latest Kanchipuram district news
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
அந்த வகையில் காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் 120 படுக்கைகள் கொண்ட கரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தினை இன்று தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
சித்த வைத்திய முறைகளுக்கு அடிப்படையான மூலக்கூறுகள் காட்சிப் படுத்தியதை அவர் பார்வையிட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த 120 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ சிகிச்சை வார்டினை ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க. சுந்தர் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.