காஞ்சிபுரம்:தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
சென்னைக்கு ரெட் அலெர்ட்
கன மழையானது தீவிரமடையும் என்பதால் சென்னைக்கு 'ரெட் அலெர்ட்' விடப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை(நவ.08) மற்றும் நாளை மறுதினம்(நவ.09) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய, பொதுப்பணித்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் முழுக் கொள்ளவான 23 அடியில் தற்போது ஏரியின் நீர்மட்டம் 21.45 அடியாக உள்ளது.
தற்பொழுது, ஏரிக்கு நீர் வரத்து தற்போது 1500 கன அடியாக உள்ள நிலையில் இன்று (நவ.07) இரவுக்குள் செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் நிரம்பும் வாய்ப்பு உள்ளதால், இன்று பிற்பகல் 1.30 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள ஐந்து மதகுகளில் இரண்டாவது மதகு திறக்கப்பட்டு, அதன் வழியாக ஏரியிலிருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.
ஏரியிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதை அடுத்து தமிழ்நாடு ஊரகத்தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி, பொதுப் பணித் துறை உயர் அலுவலர்கள் ஏரியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.