காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் சயன கோலத்தில் இருந்து நின்ற கோலத்தில் காட்சி அளிக்க ஏற்பாடுகள் செய்ய இருப்பதால், நேற்று மதியம் 12 மணிக்கு பொதுமக்கள் தரிசனம் செய்யும் கிழக்கு கோபுர வாசல் அடைக்கப்பட்டது.
அதேபோல் முக்கிய பிரமுகர்கள் மதியம் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு முக்கிய பிரமுகர்கள், பொது தரிசன பாதையில் செல்லக் கூடியவர்கள் கோயிலுக்குள் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
சயன கோலத்திலிருந்து மாறிய அத்திவரதர் மாலை 5 மணிக்குப் பின்னர் சயன கோலத்தில் இருக்கும் அத்திவரதர் சிலைக்கு பூஜைகள் செய்து நின்ற கோலத்தில் வைக்கப்பட்டது. இதனால், இன்று காலை 5 மணி முதல் அத்திவரதரை நின்ற கோலத்தில் வழக்கம்போல் பக்தர்கள் தரிசிக்கலாம் என அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அத்திவரதரை நின்ற கோலத்தில் முதல் நாள் தரிசிப்பதற்காக காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.
விழாவின் 31ஆவது நாளான நேற்று அத்திவரதர் மஞ்சள் நிற ஆடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அத்திவரதரை நேற்று மதியம் வரை மட்டுமே சயன கோலத்தில் காண முடியும் என்பதால் காஞ்சிபுரம் நகரில் பக்தர்கள் குவிந்தனர்.