காஞ்சிபுரம், திம்மசமுத்திரம் பகுதியில் போலி மதுபானங்கள் தயாரிப்பதாக மத்திய அமலாக்க குற்றப்பிரிவு காவல் துறையினருக்கும், காஞ்சிபுரம் மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் அடிப்படையில் காவலர்களின் தீவிர தேடுதல் வேட்டையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியிலுள்ள ஒரு வீட்டில் போலி மதுபான பாட்டில்களும், மதுபானங்கள் தயாரிக்கத் தேவையான பொருள்களும், ஜெராக்ஸ் மிஷினில் நகல் எடுக்கப்பட்ட ரூ.500, ரூ.2000 போலி ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வீட்டில் தங்கியிருந்த அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த துளசி (41), சித்தேரி மேடு பகுதியைச் சேர்ந்த கலையரசன் (40), ஆகிய இருவரையும் காஞ்சிபுரம் மதுவிலக்குப் பிரிவு காவல் துறை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்கள் வீட்டிலிருந்த 14 லட்சத்து 11 ஆயிரத்து 200 போலி ரூபாய் நோட்டுகள், 105 லிட்டர் எரிசாராயம், போலி மதுபானங்கள் தயாரிப்பதற்குத் தேவையான மதுபான பாட்டில்கள், மூடிகள் ஸ்டிக்கர்கள், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை மதுவிலக்குப் பிரிவு காவலர்கள் பறிமுதல்செய்தனர்.
மேலும் காஞ்சிபுரம் மதுவிலக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து போலி மதுபானங்கள் தயாரிப்பில் தொடர்புடைய மேலும் சிலரை தேடிவருகின்றனர்.