சென்னை: தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் பருவமழையின் போது ஆங்காங்கே தண்ணீர் செல்ல வழியின்றி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. இதன் காரணமாகச் சென்னை உயர் நீதிமன்றமானது நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவை அடுத்து தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏரிகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ஏரிக்கரை ஒட்டிய நீர்நிலையில் ஆக்கிரமிப்பிலுள்ள சுமார் 82 வீடுகளை இன்று (செப்.10) அகற்றப்போவதாக வருவாய்த் துறையினர் குடியிருப்பு வாசிகளிடம் தெரிவித்தனர். வருவாய்த் துறையினரின் இந்த அறிவிப்பால் நீர் நிலை ஆக்கிரமிப்பிலுள்ள குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்தனர். பின் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது வீடுகளை அகற்ற வேண்டாம் எனக் கோரிக்கையையும் முன் வைத்தனர்.