காஞ்சிபுரம் அடுத்த குருவிமலைப்பகுதியில் உள்ள திருநங்கை குடியிருப்பில் ஏராளமான திருநங்கைகள் வசித்துவருகின்றனர். இங்கு குன்றத்தூர் பகுதியில் இருந்து கடந்த மாதம் அடைக்கலம் கேட்டு வந்த ஆறு திருநங்கைகளுக்கு அடைக்கலம் கொடுத்து இப்பகுதியில் உள்ள திருநங்கைகள் தங்கவைத்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு குன்றத்தூரைச் சேர்ந்த திருநங்கைகள் ரவுடிகளுடன் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் குருவிமலைப்பகுதிக்கு வந்துள்ளனர். கார், ஆட்டோக்களில் வந்த அவர்கள் அங்கிருந்து ஆறு திருநங்கைகளை கடத்திச் சென்றுள்ளனர்.
அப்போது அவர்களை தடுக்க முயன்ற அப்பகுதி திருநங்கைகளை மரக் கிளைகள், கம்பிகள், பட்டா கத்தி மூலம் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் காயமடைந்த திருநங்கைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷின் உத்தரவின் பேரில் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குன்றத்தூர் பகுதிகளில் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது.
அப்போது குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை மகா, அவரின் கூட்டாளிகளான வடிவு, சுப்ரியா, லட்சுமி, ஹரிணி உள்ளிட்ட ஐந்து திருநங்கைகள், கடத்தலுக்கு உதவியாக இருந்த ரமேஷ், கார்த்திக், செல்வம், சேகர் உள்ளிட்ட ஒன்பது பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மூன்று கார், ஒரு ஆட்டோ, பட்டா கத்திகள் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தல் சம்பவம் நடைபெற்று 12 மணி நேரத்தில் காவல் துறையினர் அதிரடியாக திருநங்கைகளை மீட்டு குற்றவாளிகளை பிடித்ததால் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடத்தலுக்கு காரணமான குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த மகா என்கின்ற மகாலட்சுமி மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது. மேலும் குன்றத்தூர் பகுதியில் இருந்து அடைக்கலம் தேடிவந்த ஆறு திருநங்கைகள் கடந்த மாதம் சக திருநங்கைகளுடன் கிணற்றில் குளித்தபோது, ஒரு திருநங்கை இறந்துவிட்டார்.
இது குறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஒரு திருநங்கை இறந்தது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்திவந்த நிலையில் தற்போது இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ஆகையால் காவல் துறையினர் இரு பிரிவினரிடமும் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.