காஞ்சிபுரம்:அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, அதனை தனது சமூகவலைதளமான யூடியூபில் பதிவேற்றம் செய்து பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவரது சாகசங்களைப் பார்த்து இளைஞர் சிறுவர் என பாகுபாடு இல்லாமல் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். மேலும் அதிவேகமாக பைக் ஓட்டுவதால் இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்து வந்தது. இதனிடையே சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில், போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார் வாசன். இந்த நிலையில், 'மஞ்சள் வீரன்' என்கிற திரைப்படத்திலும் தற்போது நடித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டிடிஎஃப் வாசன் சென்னையில் இருந்து - மகாராஷ்டிராவிற்கு தனது நண்பரான அஜித் என்பவருடன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஒருவரையொருவர் முந்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்டும், அதிவேகமாக வாகனத்தை இயக்கி, ஸ்டண்ட் என்று சொல்லக் கூடிய பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார் வாசன்.
மேலும் வரும் வழிகளில் தனது ரசிகர்களுக்கு, தான் வரும் இடங்கள் குறித்தும் சமூகவளைதளங்களில் பதிவிட்டு தகவல் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே இளைஞர்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில், வாசன் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அந்த வகையில் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, வீலிங் சாகசத்தில் வாசன் ஈடுப்பட்டள்ளார். அப்போது, பைக்கின் பின்புறமானது சாலையில் தேய்ந்து நிலை தடுமாறியதில் அவரது இருசக்கர வாகனம் இரண்டு மூன்று முறை பல்ட்டி அடித்து தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் வாசனுக்கு காயம் ஏற்பட்டு காரப்பேட்டை அருகிலுள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.