காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள மாமல்லபுரத்தில் வருகின்ற 11, 12, 13ஆம் தேதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அது தொடர்பாக இந்திய பிரதமர் வரும் 11ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைவார்.
பிறகு மாலை 5 மணிக்கு அர்ஜுனன் தபசு என்ற இடத்தில் சீன அதிபரை வரவேற்கும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்பார். இதைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும், முதலில் அர்ஜுனன் தபசை பார்வையிட்டுப் பிறகு, வெண்ணெய் உருண்டைக் கல், அதனைத் தொடர்ந்து ஐந்து ரதம், இறுதியாக கடற்கரைக் கோயில் ஆகிய இடங்களைப் பார்வையிடுகின்றனர். பின்னர் கடற்கரைக் கோயிலில் அமைந்துள்ள கலந்தாய்வு கூடாரத்தில் 6 மணியளவில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் 2 நாடுகளுக்கு இடையிலான உறவுகள், சர்வதேச அளவில் நிலவும் பிரச்னைகள், இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.