காஞ்சிபுரம்:தொடர் கன மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் அணைக்கட்டிலிருந்து ஒரு லட்சம் கன அடி நீர் பாலாற்றில் திறந்துவிடப்பட்டதை அடுத்து காஞ்சிபுரம் பாலாற்றில் 2015-ஐ காட்டிலும் வரலாறு காணாத கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்பட 16 மாவட்டங்களுக்கு நேற்று (நவம்பர் 18) மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்திருந்தது.
பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு இதனையடுத்து, காஞ்சிபுரத்தில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. அதில் அதிகப்படியாகக் காஞ்சிபுரத்தில் 171.60 மி.மீட்டரும், குறைந்தபட்சமாகக் குன்றத்தூரில் 48.96 மி.மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 76 மி.மீட்டரும், உத்திரமேரூரில் 144 மி.மீட்டரும், வாலாஜாபாத்தில் 61.80மி.மீட்டரும், செம்பரம்பாக்கத்தில் 49மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பாலாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு
இந்நிலையில் தொடர் கன மழையின் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் அணைக்கட்டிலிருந்து இன்று (நவம்பர் 19) காலை 6 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து நான்காயிரத்து 54 கன அடி நீர் பாலாற்றில் திறந்துவிடப்பட்டது. அதன் காரணமாகப் பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் 2015இல் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினைக் காட்டிலும், தற்போது வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடல்போல் காட்சியளிக்கின்றது. இதனையடுத்து பாலாற்றுத் தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கி வெள்ள நீர் ஆர்ப்பரித்து கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், பாலாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டிருப்பதால், எவ்வித போக்குவரத்துத் தடையும் இன்றி வாகனங்கள் அப்பாலம் வழியாகத் தங்குதடையின்றி சென்றுவருகின்றன.
மேலும், காஞ்சிபுரம் பாலாறு, செய்யாற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக இவ்விறு ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி நேற்று வெள்ள இடர் எச்சரிக்கைவிடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்