தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வை பல்வேறு தன்னார்வ குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறது.
தற்போது, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் பிறந்நாளை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவித்து இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் பெண்கள் தற்காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கத்தில் வைத்து நடத்தப்பட்டது.
பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி இந்நிகழ்வில், தனியார் தற்காப்பு கலை பயிற்சி மையத்தின் பயிற்றுநர், தனது பயிற்சி மாணவர்களை வைத்து பெண்கள் தங்கள் கைகளில் உள்ள சிறிய பொருட்கள் மூலம் தங்களைப், பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து செய்துகாட்டினார். இந்நிகழ்வில் இக்கல்லூரியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து தனியார் தற்காப்புக்கலை பயிற்றுநர் கூறுகையில், "முன்னாள் முதலைச்சரின் பிறந்ததினத்தை தமிழ்நாடு அரசு பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் பாதுகாப்புக் கலைகளைக் கற்றுக்கொள்வது அவசியம்.
இது அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும். மனதிடம் உள்ள பெண்கள் இக்கலையை எளிதில் கற்றுக்கொள்ளலாம். காஞ்சிபுரத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே இதுபோன்ற தற்காப்புக்கலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியினை தங்கள் பயிற்சி மையம் தொடர்ந்து செய்யும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இயற்கை விவசாயத்தை கையிலெடுத்து பசுமை கண்ட பட்டதாரி!