காஞ்சிபுரம்:பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி வரை அமலில் இருந்தன. இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, நாடாளுமன்றத்தில் 3 குற்றவியல் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்பதை, பாரதிய நாகரிக் சுரக்ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அந்த 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மசோதாக்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு அவரும் ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களும் கடந்த 25ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
பாரத நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிதாக கொண்டு வரப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தில், விபத்தால் மரணம் ஏற்பட்டால், ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் ஒட்டுநர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை எனவும் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 95 லட்சம் லாரிகள் ஓடுகின்ற நிலையில், விபத்து தொடர்பான இந்த விதிமுறைக்குக் கனரக ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கார், பேருந்து, லாரி ஒட்டுநர்கள் முக்கிய சாலைகளை முடக்கி 1ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனால் அத்தியாவசியப் பொருட்கள் சேவையிலும் தடை ஏற்பட்டிருந்தது. குஜராத், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓட்டுநர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் சம்பவங்களும் நிகழ்ந்தன. புதிய சட்டப்பிரிவு மசோதா தற்போதைக்கு அமல்படுத்தப்படாது என மத்திய அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சங்கங்கள் அறிவித்தது. இதனையடுத்து நேற்றிரவு முதலே கனரக வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு எதிரான இந்த கறுப்பு சட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அண்ணா சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வ.ராஜா ஆகியோர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்!