காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் கட்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சசிதரன். இவருடைய மனைவி கன்னிகா (32). இவர்களுக்கு மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கன்னிகா மூன்று வருடங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் கருத்தடை சாதனமான காப்பர் டீ பொருத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மஞ்சுளாவால் இந்த காப்பர் டி அகற்றப்பட்டது.
அதன் பின்பு இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று வரை கடினமான வயிற்று வலியில் கன்னிகா துடித்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் சாப்பிட முடியாமலும் நெஞ்சு வலி, சிறுநீர் கழிக்கும் இடத்தில் எரிச்சல் போன்ற பிரச்சினைகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும், நேற்று மற்றும் நேற்று முன்தினம் அதிகப்படியான வயிற்று வலி மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு பயங்கரமான வேதனையில் துடித்ததாகவும், இதனால் நேற்று ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு வந்த கன்னிகா பணியில் இருந்த மருத்துவ பணியாளரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
பிரசவ அறைக்கு அழைத்துச் சென்ற மருத்துவ ஊழியர் கையில் க்ளவுஸ் அணிந்து தன்னை பரிசோதிப்பது போல் நடித்து, ஆனால் தன்னை பரிசோதிக்காமல் திங்கள்கிழமை வா என்று சொல்லி மாத்திரை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். இதனால் மனம் உடைந்து போன கன்னிகா மீண்டும் வேதனையில் துடித்துள்ள நிலையில், இன்று காலை சிறுநீர் கழிக்கும்போது எலுமிச்சம் பழம் அளவிலான மருத்துவமனையில் பயன்படுத்துகிற காட்டன் துணி கீழே வந்து விழுந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ந்து போன கன்னிகா மற்றும் உறவினர்கள் இன்று ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு வந்து இதுகுறித்து மருத்துவ ஊழியரிடம் கூறியுள்ளனர். அப்போது மருத்துவர் மற்றும் ஊழியர் பரிசோதனை செய்யாமலும், சரியான பதில் அளிக்காமலும் அலட்சியமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது.