நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வக வசதியை ஏற்படுத்துவதற்காக மத்திய மீன்வளத்துறை 19 கோடியே 26 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதில் முதல்கட்டமாக 4 கோடி ரூபாயில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நீர்வாழ் உயிரினங்கள் தனிமைப்படுத்துதல் அலகு நிர்வாகக் கட்டத்துடன் இணைந்த நோய் அறியும் ஆய்வகம் மற்றும் உணவகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஜன.21) நடைபெற்றது.
அதையொட்டி தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் முன்னிலையில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து, மீன்வளர்ப்பு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், “சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பெருபான்மை இடங்களில் வெற்றிபெறும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. ஏற்கனவே மக்களவையில் எங்களுடன் கூட்டணி அமைத்த கட்சிகளுடன் கூட்டணி தொடரும். பாமகவுடன் எந்த இழுபறியும் இல்லை. தேமுதிகவும் எங்கள் கூட்டணியில்தான் உள்ளது” எனத் தெரிவித்தார்.