மக்களவைத் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு நிறைவேற்றும் வகையில் பல்வேறு முயற்சிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலான ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு, மினி மாரத்தான் போட்டி ஒன்று நடத்தப்பட்டது.
காலை ஆறு மணிக்கு தொடங்கிய இந்த விழிப்புணர்வு மாரத்தானில், காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா, தேர்தல் அலுவலர்கள் ஸ்ரீதர், மோகன் பாபு உட்பட சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மாரத்தானில் இளைஞர்கள், சிறுவர்கள், முதியோர்கள் என அனைத்து தரப்பு வயதினரும் பங்கேற்று, விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழிநெடுகிலும் அளித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தப் போட்டியின்போது, காஞ்சிபுரம் ரோட்டரி சங்கம், மருத்துவர்கள் சங்கம் உட்பட பல்வேறு தொண்டு நிறுவனங்களும் குடிநீர், குளிர்பானங்களை வழி நெடுகிலும் வழங்கிவந்தன.
இந்த மாரத்தான் போட்டியின் இறுதியில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இதன் நிறைவு விழா நடத்தப்பட்டு, மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.