காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் ஊராட்சி காட்ரம்பாக்கம் தெருவில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தனநஞ்சய் குமார்(23) என்ற இளைஞர் வாடகைக்கு வீடு எடுத்து நண்பருடன் தங்கி வந்துள்ளார். இவர், இப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார்.
வட மாநில இளைஞர் தற்கொலை :
இந்நிலையில் சம்பவத்தன்று தனநஞ்சய் குமாரோடு அறையில் தங்கி வந்த சக பணியாளர்கள், நேற்றிரவு (டிச.17) வேலையை முடித்துவிட்டு இன்று(டிச.18) காலை வீட்டிற்குச் சென்றனர். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தனநஞ்சய் குமார் தூக்கில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், தனநஞ்சய் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா? தற்கொலையா? :
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.