தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைந்த காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தின் உடல் இன்று நல்லடக்கம்

காஞ்சிபுரம்: உடல் நலக்குறைவினால் மறைந்த காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தின் 232ஆவது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் பூத உடல் இன்று (டிச.03) நல்லடக்கம் செய்யப்படுகிறது.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்

By

Published : Dec 3, 2020, 6:42 AM IST

சைவ மடங்களில் மிகத் தொன்மையான மடம் காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச மடம் ஆகும். இது காஞ்சிபுரம் பரமசிவன் தெருவில் உள்ளது. இம்மடத்தின் 232ஆவது பட்டம் ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 2008ஆம் ஆண்டு முதல் பொறுப்பேற்று தற்போது வரை செயல்பட்டு வந்தார். இந்த மடத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மடத்தினுள் தவறி விழுந்ததையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவருக்கு வயது 87.

மறைந்த ஆதீனத்தின் பூத உடல் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானபிரகாச மடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அவரின் பூத உடல் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இம்மடத்தில் மறைந்த தொண்டை மண்டல ஆதீனத்தின் மடாதிபதிகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று (டிச.03) ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் உடலும் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நித்யானந்தாவின் சீடர்கள் இந்த மடத்துக்கு வந்து தங்கினர். இந்த மடத்துக்கு பல நூறு கோடி சொத்துகள் இருப்பதால் அவர்கள் மடத்தை கைப்பற்ற முயல்வதாக கூறி, இந்த மடத்தின் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அப்போது ஞானப்பிரகாச சுவாமிகள் தன் விருப்பத்தின் பேரிலேயே அவர்கள் தங்கியிருப்பதாக கூறி அவர்களை அனுமதித்தார். மடத்தில் தங்கியிருப்பதால் அவர்கள் மடத்துக்கு உரிமை கோர முடியாது. அவர்கள் சில காலம் தங்கியிருந்து இங்கிருந்து சென்றுவிடுவர் என்று கூறி அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதைத் தொடர்ந்து சில பக்தர்கள் அங்கேயே தங்கி இருந்தனர்.

தற்போது ஆதீனம் முக்தியடைந்ததைத் தொடர்ந்து அந்த மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நித்யானந்தா பக்தர்களால் ஏதேனும் தொந்தரவு உள்ளதா என்பது குறித்தும் மடத்தின் பக்தர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க:நித்தியானந்தா முன்னாள் சீடர் தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details