காஞ்சிபுரம்:பரந்தூரில் புதியதாக சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகியும் வராததால் சுற்றுவட்டார கிராம மக்கள் அரசு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய மாநில அரசுகளால் வாலாஜாபாத் ஒன்றியம் பரந்தூரில் சென்னையில் 2ஆவது புதிய சர்வதேச விமானநிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூர் உட்பட 12 கிராமங்களின் விவசாய விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகள் கையகப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமத்தினரும் கடும் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர்.
பரந்தூர் விமானநிலையம் வேண்டாம்-கிராமசபை தீர்மானம்:அந்த வகையில், சுதந்திர தினமான நேற்று (ஆக.15) புதிய விமானநிலையம் அமைக்க எதிர்ப்புத்தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்தொடர்ச்சியாக, அப்பகுதியிலுள்ள நெல்வாய், 144 தண்டலம், கள்ளிப்பட்டு, மேட்டுபரந்தூர், நாகப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளிலும் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளை எடுக்கக்கூடாது என கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்து கேட்புக் கூட்டம்; சரியான நேரத்தில் பங்கேற்காத அமைச்சர்கள்:இந்நிலையில் இன்று (ஆக.16) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 'புதிதாக சர்வதேச விமானநிலையம் அமைப்பது குறித்து பரந்தூர் உள்ளிட்ட 12 கிராம மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம்' நடந்தது. முன்னதாக, காலை 10 மணியளவில் இக்கூட்டம் நடக்கும் எனத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் உட்பட அமைச்சர்கள், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, ஏ.வ. வேலு ஆகியோர் கலந்துகொள்வர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் சம்பந்தபட்ட 12 கிராமங்களிலும் இருந்து கிராமத்திற்கு 5 பேருக்கு மட்டும் அனுமதி என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன்படியே கிராமத்தினர் பங்கேற்று இருந்தனர். காலை முதலே, காத்திருந்த கிராம மக்கள் மதியம் 12 மணிவரை ஆகியும் அமைச்சர்கள், ஆட்சியர் என யாரும் வராததால் அலுவலர்களிடம் கேள்விகள் எழுப்பினர்.