காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் பகுதியில் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கிவருகிறது. பாறைகளை உடைப்பதற்காக இங்கே ஜெலட்டின் குச்சிகள் வைக்க குடோன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக குடோனில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் குடோன் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கல்குவாரியில் பணிபுரிந்துவந்த தொழிலாளி ஒருவரை கிராம மக்கள் மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். காணாமல்போன மற்றொரு தொழிலாளி வெடி விபத்து நடைபெற்ற சமயத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகித்து அவரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த வெடி விபத்தில் 20-க்கும் அதிகமான ஆடுகள் பரிதாபமாக பலியாகின. சம்பந்தப்பட்ட இடத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.