தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு பல்வேறு வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற, இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் பொன்னையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக இரு சக்கர வாகனங்களில் சென்ற மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம் சார் ஆட்சியர் சரவணன், மாவட்ட ஊராட்சி முகமை அலுவலர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.