காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் ஜூலை 3ஆம் தேதி தொடங்கின. மூன்று மாதங்களாக நடந்துவருகின்றன. இந்த அகழாய்வுப் பணிகள் அந்த பகுதியில் பழங்கால சிவன் சிலை தொடர்ந்து வழிபாட்டில் இருந்து வந்ததால் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக 100 அடி நீளம், 100 அடி அகலத்தில் ஆய்வு மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையிலான அகழாய்வு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை பழங்கால கல் மணி, கண்ணாடி மணி, எலும்பு உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ண பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் அதிகளவில் கிடைத்தன. இந்த நிலையில் 1.6 கிராம் தங்க அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.