காஞ்சிபுரம்: பஞ்சபூதத் தலங்களில் மண் தலமாகவும், தேவாரம், திருவாசகம் மட்டுமில்லாமல், 63 நாயன்மார்களால் பாடல் பெற்ற தலமாகவும், 3,000 ஆண்டுகள் பழமையான கோயிலாக விளங்கும் பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை ஒட்டி ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதும், மனோரஞ்சிதம், மல்லிகை, தவனம் மலர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே ஏகாம்பரநாதர் எழுந்தருளினார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் கொடியேற்றம் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கொடிக்கம்பத்தில் சிவலிங்கம் பொறித்த கொடி ஏற்றி வைக்கப்பட்டு, பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக தொடங்கப்பட்டது.
கொடியேற்ற விழாவில் ஏராளமான பொதுமக்களும், நகரின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய விழாவான 63 நாயன்மார்கள் உற்சவம், மார்ச் 23ஆம் தேதி காலையிலும், அன்று இரவே வெள்ளித் தேர் உற்சவமும், மார்ச் 26ஆம் தேதி வெள்ளியன்று மாவடி சேவை உற்சவமும், மார்ச் 27ஆம் தேதி பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவமும் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
இதையும் படிங்க:'நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தராவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம்'