தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையை நடத்திவருகின்றனர்.
அதன்படி, எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் பணமும், சொத்துக்குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 18) சுகாதாரத் துறை முன்னாள்அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக திடீர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
உதவியாளர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை புதுக்கோட்டையிலுள்ள விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை செய்துவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் விஜயபாஸ்கரின் முன்னாள் உதவியாளர் அஜய்குமார் என்பவரது இல்லத்தில் எட்டு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அஜய்குமார் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். அஜய்குமாருக்குச் சொந்தமாக தனியார் பள்ளி ஒன்றும் வாலாஜாபாத்தில் இயங்கிவருகிறது. தற்போது அவரது இல்லத்தில் நடைபெற்றுவரும் சோதனையைத் தொடர்ந்து அவருக்குச் சொந்தமான பள்ளியிலும் சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை