தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு மின்சார இணைப்பு' - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

அரசுப் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்கள் (நீர்நிலை தவிர) அனைவருக்கும் உடனடியாக மின்சார இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

electrical
electrical

By

Published : Aug 12, 2021, 1:38 PM IST

காஞ்சிபுரம்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம் மறைமலைநகரில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்து.

இக்கூட்டத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், துறைசார் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் உள்ள வருவாய்த் துறை சார்ந்த குறைபாடுகள் குறித்துப் பேசினர்.

இதில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு வழங்கிய இலவச குடிமனை பட்டாக்கள் கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் எந்தவித அரசு பயன்களையும் பெற முடியாமல் அவதிப்பட்டுவருவதாகத் தெரிவித்தனர்.

மேலும் அதிக மதிப்பீடுகள் உடைய நிலங்களைப் பலர் ஆக்கிரமித்துவைத்துள்ளனர். இதுபோன்ற ஆக்கிரமிப்பு நிலங்களைப் பிற துறைகளுடன் இணைந்து வருவாய்த் துறையினர் மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும் பல பதிவேடுகள் பிரிக்கப்படாமல் இருப்பதால் மக்கள் பணிகள் கிடப்பில் உள்ளன.

குத்தகை என்ற பெயரில் அதிக மதிப்புடைய அரசு நிலம் தனி நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் வரப்பெற்ற மனுக்கள் குறித்து ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களை மீண்டும் ஆய்வுசெய்திட அரசு அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் 2006 முதல் 2011 வரை வழங்கப்பட்ட இலவச குடிமனை பட்டாக்கள் கிராம கணக்குகளில் உடனடியாக ஏற்ற வேண்டும், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரவேண்டிய கோப்புகளை உடனடியாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

நில மதிப்பு அதிகமுள்ள இந்த மாவட்டங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை வைத்துள்ளவர்கள் யாராக இருந்தாலும் நிலத்தை கணக்கு எடுக்க அரசு அலுவலரிடம் கூறப்பட்டுள்ளது.

நீண்ட நாள்களாக அரசுப் புறம்போக்கு நீர்நிலை தவிர்த்து நிலங்களில் குடியிருந்துவரும் மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதாகத் தெரியவருகின்றது. இது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து விதிகளைத் தளர்த்தி மின் இணைப்பு வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வரவு-செலவுத் திட்ட அறிக்கை: தொழில் துறை எதிர்பார்ப்புகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details