காஞ்சிபுரம்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதல் வட்டாட்சியர் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு குழுவினரும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆலந்தூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் முழுவதும் சுழற்சி அடிப்படையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம், பட்டுப்புடவைகள், தங்க நகைகள், மதுபாட்டில்கள் உள்ளிட்ட இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மாவட்ட கருவூலத்தில் சேர்க்கப்பட்டன.
அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் 4 கோடியே 71 லட்சத்து 61 ஆயிரத்து 410 ரூபாயும், ரூ.1 கோடியே 57லட்சத்து 30 ஆயிரத்து 921 மதிப்பிலான இதர பொருட்களும், ரூ.15 லட்சத்து 8 ஆயிரத்து 640 மதிப்புள்ள மதுபாட்டில்கள் என மொத்தம் ரூ.6 கோடியே 44 லட்சத்து 971 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால் ரூ.1 கோடியே 15 லட்சத்து 15 ஆயிரத்து 84 பணம், இதர பொருள்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மே 5ஆம் தேதி வணிகர் சங்க பேரமைப்பின் மாநாடு - விக்கிரமராஜா