காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சட்டத்துறைக்கான அலுவல் அறையை திறந்து வைத்தபின் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “நாள்தோறும் தேர்தல் ஆணையத்தில் இருந்து புது புது உத்தரவுகள் வருகின்றன. குறிப்பாக 80 வயதுக்கு மேலானவர்களுக்கு தபால் வாக்கு செலுத்த, தேர்தல் ஆணையம் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை பீகார் தேர்தலில் நடைமுறைப்படுத்தி, 50 ஆயிரம் தபால் ஓட்டுகள் பதிவாயின. 12 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி ஆட்சி தக்கவைக்கப்பட்டது. ஆகவே இதனை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும்.
இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் வாக்குகளையும் தபால் வாக்குகளாக மாற்றி, அந்த வாக்குகளை எளிதாக பெறுவதற்கு சதித்திட்டம் தீட்டுகிறார்கள். எனவே வருகிற தேர்தலில் நாம் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன. ஏனெனில் அதிகாரம் படைத்த இரண்டு ஆளுங்கட்சிகளை நாம் எதிர்க்கிறோம். புதுச்சேரியில் 4 நாட்களில் 4 எம்எல்ஏக்கள் ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறி விட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரைக்கூட மோடி மற்றும் அமித்ஷாவால் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை” என்றார்.