காஞ்சிபுரம்:திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15ஆவது பொதுத் தேர்தலில் மாநகர பகுதிச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான வார்டு வரையறை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சி தவிர்த்து மற்ற மாநகராட்சி பகுதிகளுக்கான வார்டு வரையறையை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் காஞ்சிபுரம் மாநகராட்சிப் பதவிகளுக்கான திமுகவின் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டமானது திமுக வடக்கு மற்றும் திமுக தெற்கு என இரு மாவட்டச் செயலாளர்களைக் கொண்டுள்ளது. அதில் திமுக காஞ்சி வடக்கு மாவட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாவட்டச்செயலாளராகவும், திமுக காஞ்சி தெற்கு மாவட்டத்திற்கு உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளனர்.
இந்நிலையில், நகரச்செயலாளர் பதவிக்கு பதில் காஞ்சிபுரம் மாநகராட்சி நான்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு நான்கு பகுதிச்செயலாளர்கள் உள்பட வார்டு வாரியாக செயலாளர், பொருளாளர், வட்டச்செயலாளர் போன்ற பதவிகளுக்கு காஞ்சிபுரம் டி.கே.நம்பி சாலையிலுள்ள திமுக காஞ்சி தெற்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் பவள விழா மாளிகையில் வேட்பு மனு தாக்கல் இன்றைய தினம் நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த பலதரப்பினரும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.