காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக மாநில மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். அதையொட்டி நாள்தோறும் அத்தொகுதியில் பல்வேறு இடங்களில் கூட்டணிக் கட்சிகளுடன் சூறாவளி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், நேற்று (மார்ச்.28) மாலை காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு உள்பட்ட ரங்கசாமி குளம், நாராணயபாளையம் தெரு, நாகலத்து தெரு, கீரை மண்டபம் மண்டவேலி தெரு உள்ளிட்ட பகுகளில் கூட்டணிக் கட்சியினருடன் அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, நாகலத்து மேடு தெருவிற்கு வருகை புரிந்த அவருக்கு திமுக பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி.சீனிவாசன் தலைமையில் அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்து சிறப்பான வரவேற்பளித்தனர்.
பின்னர் அப்பகுதி வாக்காளர்களிடம் சி.வி.எம்.பி.எழிலரசன் பேசுகையில், "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காஞ்சிபுரத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, கலைக் கல்லூரி அமைக்கப்படும். காஞ்சிபுரத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு காவிரி குடிநீர் திட்டம் திருப்பாற்க்கடல் வரை நீட்டித்து தரப்படும். நெசவாளர்களின் நீண்ட நாள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.
பரப்புரையில் பேசும் சி.வி.எம்.பி. எழிலரசன் 25 ஆயிரம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்க்காக அண்ணா பட்டு பூங்கா மீண்டும் இயக்கப்படும். படித்து முடித்து வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிட புதியதாக தொழிற்பேட்டை தொடங்கப்படும்" என்றார். இந்த வாக்கு சேகரிப்பின்போது திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:பத்திரத்தில் வாக்குறுதிகள்.. நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா..