சட்டவிரோத செயல்களுக்கான இடமாக மாறிவரும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்? அரசு ஊழியர்கள் அச்சம்! காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்களுக்கான வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் 1969ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் ஏ,பி,சி,டி ஆகிய பிரிவுகளில், மூன்று அடுக்குமாடிகள் கொண்ட 230 குடியிருப்பு வீடுகள் உருவாக்கப்பட்டது.
அதேபோல், 1990ஆம் ஆண்டு எம், எச் ஆகிய பிரிவுகள் கட்டப்பட்டு, அதிலும் மூன்று அடுக்குகள் கொண்ட 90 குடியிருப்புகள் என மொத்தம் 320 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. அப்பகுதியில், காஞ்சிபுரம் கோட்டாட்சியர் உள்பட பல அரசுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாடகைக்கு தங்கி வந்தனர்.
தற்போது, இக்குடியிருப்பு பகுதியில் இருக்கும் வீடுகள் மிகவும் சிதிலமடைந்த நிலையில் அதன் கதவுகள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டும், மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தும் மோசமான நிலையில் காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அனைத்து வீடுகளின் சுற்றுப் பகுதிகளில் புதர் மண்டி காணப்படுவதோடும், அதனால் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாகத் தென்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அது மட்டுமல்லாமல், பாழடைந்த நிலையில் இருக்கும் இந்த குடியிருப்பு பகுதிகள், சமூக விரோத கும்பலின் புகலிடமாகத் திகழ்வதாகவும், மதுபானம் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடமாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், முன்னதாக இப்பகுதி செவிலிமேடு பேரூராட்சியின் கீழ் இருந்தபோது, அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததாகவும், தற்போது மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியாக மாறிய பின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த தேர்தலின்போது திமுக, இந்த குடியிருப்பு பகுதிகளை இடித்து தள்ளிவிட்டு, புதிதாக குடியிருப்புகள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்ததாகக் கூறும் அரசு ஊழியர்கள், தற்போது இந்த இடத்தினை புனரமைக்க தமிழக அரசோ, மாவட்ட நிர்வாகமோ எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆவேசத்துடன் கூறுகின்றனர்.
இதனால், பணியிட மாற்றத்தில் மற்ற மாவட்டத்தில் இருந்து வரும் அரசு அதிகாரிகள், வீட்டு வசதி வாரியத்தின் நிலையைக் கண்டு அங்கு தங்க மறுத்துவிட்டு, புறநகர் பகுதிகளில் வாடகைக்கு வீடுகளில் தங்கி, அலுவலகத்திற்கு வருகின்றனர். இதனால் மிகவும் சிரமத்திற்கு ஆளாவதாக, அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து, அக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் அரசு வாகன ஓட்டுநர் செல்வராஜ் என்பவர், குடியிருப்பு பகுதி சுற்றிலும் புதர் மண்டியிருப்பதால் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், இதனால் இரவில் வெளியில் நடமாட பயமாக இருப்பதாகவும் கூறினார். மேலும், இது குறித்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அலுவலரிடம் கேட்டபோது, கூடிய விரைவில் அனைத்து வீடுகளையும் இடித்துவிட்டு, புதிதாக கட்டடங்களை கட்ட ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் செல்லன் என்பவர் கூறும்போது, “சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் இந்த குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. தற்போது இது சீரழிந்து கிடப்பதால், வெளியூரிலிருந்து வரும் அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இங்கே தங்க மறுத்து, தினமும் தங்களது கைகளில் இருந்து பணத்தை செலவு செய்து வருவதோ அல்லது வாடகைக்கு வேறு வீட்டில் குடியிருக்கவோ செய்கின்றனர். இவ்வாறு செலவழித்தால், அவர்கள் நேர்மை தவற வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு இதை உடனே சீரமைப்பு செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க:புத்தாண்டு தினத்தை கருப்பு தினமாக அனுசரித்த முன்னாள் ராணுவ வீரர்கள்..! காரணம் என்ன?