காஞ்சிபுரம்: கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பட்டுச்சேலை கூட்டுறவு சங்கங்கள், தனியார் பட்டு சேலை விற்பனைக் கடைகள் மூடப்பட்டிருந்தன.
இதனால் திருமணம், சுப நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பட்டுச் சேலைகளை வாங்க முடியாமல் வெளிமாவட்ட, வெளிமாநில, வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
கடைகள் திறக்கப்படாத காரணத்தால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு நெசவாளர்களும், விற்பனையாளர்களும் செய்வதறியாது தவித்து வந்தனர்.
ஊரடங்குத் தளர்வை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் பட்டுசேலை வாங்க குவிந்த மக்கள் கூட்டம் இந்நிலையில் கரோனா தொற்றுக்குறைவின் காரணமாக தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு உத்தரவில் தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டது.
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட 27 மாவட்டங்களில் நேற்று (ஜூன் 28) முதல் ஜவுளிக் கடைகள், துணிக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதனால் பட்டு நகரமான காஞ்சிபுரத்தில் ஒன்றரை மாதங்களுக்குப்பிறகு மீண்டும் பட்டு கூட்டுறவு சங்கங்கள், தனியார் பட்டு சேலைக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை களைகட்டியுள்ளது.
தளர்வுக்காகவே காத்திருந்த ஏராளமான வெளிமாநில, மாவட்ட வாடிக்கையாளர்கள், சுபநிகழ்ச்சிகளுக்குத் தேவையான பட்டு சேலைகளை வாங்க குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் வந்து குவிந்தனர். மேலும் பட்டுச் சேலைக் கடைகளைத் திறந்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஊரடங்குக்கு பின்னர் இன்று அருங்காட்சியகம் திறப்பு!