கோயில் நகரமாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது கரோனா வைரஸ் பரவலைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்க, இந்து சமய அறநிலையத்துறை கடந்த ஐந்து மாதங்களாக திருக்கோயில்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் ஊரடங்கு உத்தரவை, சில திருத்தங்களை மேற்கொண்டு சில கோயில்களுக்கு விதிவிலக்கு அளிக்க உத்தரவிட்டார்.
கூட்டமாக ஆடிக்கிருத்திகை கொண்டாடிய பக்தர்கள் - அரசு அலுவலர்கள் அலட்சியம்
காஞ்சிபுரம்: இந்து சமய அறநிலையத்துறை அலட்சியத்தால் காஞ்சிபுரம் அருகே கரோனா விதிகளை மீறி, ஆடிக் கிருத்திகை கொண்டாட்டத்தில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 12) வல்லக்கோட்டை, காஞ்சிபுரம் குமரக்கோட்டம், இளையனார்வேலூர் முருகன் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், கோயில் வாயிலிலேயே பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக வாலாஜாபாத் அடுத்த இளையனார்வேலூர் முருகன் கோயிலில் கரோனா விதிமுறைகளை மீறி, அதிக அளவில் மக்கள் கூடியுள்ளனர். முடி காணிக்கை செலுத்தி, குளத்தில் குளித்து, முருகன் கோயில் வாசலில் தீபம் ஏற்றி, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
இதுபோன்று காணிக்கை செலுத்தும் இடம் உள்ளிட்ட பல இடங்களில் விதிமுறைகளை மீறி, செயல்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு கரோனா அதிக அளவில் பரவும் சூழல் அதிகம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த இந்து சமய அறநிலையத் துறையும் காவல் துறையும் ஈடுபடவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.