காஞ்சிபுரம்: 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (ஜூலை 15) மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஆட்சியர் எம். ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச இருசக்கர வாகனம், குடிசை மாற்று வாரியம் சார்பில் இலவச வீடு என 787 பயனாளிகளுக்கு எட்டு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் உத்திரமேரூர் ஒன்றியம் அப்பைநல்லூர் கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான 70 வயது மூதாட்டி கமலா, மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது மு.க. ஸ்டாலினிடம் தனக்கு இருசக்கர வாகனம் வழங்குமாறு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் நேற்று (ஜூலை 15) அவருக்கு 83 ஆயிரத்து 963 ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கியது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
70 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டிக்கு இருசக்கர வாகனம் வழங்கல் இது குறித்து கமலா தெரிவிக்கையில், “நான் சேலை வியாபாரம் செய்துவருகிறேன். எனக்கு 54 வயதுதான் ஆகிறது. மாற்றுத்திறனாளி என்பதால் எனக்கு அந்தத் துறையின் சார்பில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நான் திமுக ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளராக உள்ளேன்” என்றார்.
கமலாவின் ஆதார் அட்டையில் அவர் பிறந்த ஆண்டு 1951 என உள்ளது. விழா முடிந்த பிறகு தனக்கு வழங்கிய இருசக்கர வாகனத்தை ஓட்ட முடியாததால் அவரின் பேரன் ஓட்டிச் சென்றார்.
70 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி மூதாட்டியால் இருசக்கர வாகனத்தை ஓட்ட இயலுமா என்பது எல்லோரிடத்திலும் சிறிது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றிவரும் நிலையில், இவ்வாறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது கட்சி சார்ந்து செயல்படாமல், தகுதிகளின் அடிப்படையில் தகுதியுடையவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி