காஞ்சிபுரம்: குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்காலங்களில் வெள்ளம் பாதிக்கக்கூடிய குடியிருப்புப்பகுதிகளில் வெள்ளத்தடுப்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் எம். ஆர்த்தி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (ஆக.24) ஆய்வு மேற்கொண்டனர்.
ரூபி பில்டிங், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட மகாலட்சுமி நகர், ராயப்பா நகர் உள்ளிட்டப் பகுதிகளில் அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, அலுவலர்களிடம் பணிகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் கேட்டறிந்தனர்.
அப்போது குமரன் நகர், அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்டப் பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள் தாங்கள் வசித்து வரும் பகுதிகளில் பருவ மழைக்காலங்களில் அதிகப்படியான வெள்ளப்பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இது குறித்து ஆய்வு மேற்கொள்ளவரும் அலுவலர்களிடம் வெள்ளப்பாதிப்பைத்தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.