காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் ஆய்வு குறித்தும், புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை பாா்வையிட்டார். பின்னா், வருவாய்த் துறை சாா்பில் 636 பயனாளிகளுக்கு ரூ. 3.26 கோடி மதிப்பிலும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்- மகளிா் திட்டம் மூலம் 11,702 பயனாளிகளுக்கு ரூ. 27.15 கோடி மதிப்பிலும் மொத்தமாக 15,910 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பால்வளத் துறை, பொதுப்பணித் துறை, தோட்டக்கலைத் துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ. 19.20 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, இந்துசமய அறநிலையத் துறை உள்ளிட்ட 16 துறைகளின் சார்பில் 18 ஆயிரத்து 279 பயனாளிகளுக்கு 134 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
மேலும், விழாவில் காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்க்கதிா்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ரூ. 190.08 கோடி மதிப்பிலான 2,112 அடுக்குமாடி குடியிருப்புகளையும், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ரூ. 3.05 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களையும் திறந்து வைத்தார்.