காஞ்சிபுரம்: சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்ற காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி ஆண்டுதோறும் பெய்யும் பருவ மழையால் நிரம்பி விடும். இதனால் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவ்வாறு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரால், சென்னையில் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டு சென்னை மற்றும் சென்னை புறநகரில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே, ஒவ்வொரு பருவமழை மற்றும் புயலால் ஏற்படும் மழையின்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து தொடர்ந்து அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது வடகிழக்கு பருவமழையானது துவங்கி உள்ள நிலையில் இன்று காலை ஆறு மணி நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் தற்போது 20.29 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் தற்போதைய நிலவரப்படி சுமார் 2.67 டிஎம்சி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ளது.