காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் நேற்று (ஆக.7) வழக்கம்போல் பணிகளை முடித்து வங்கியைப் பூட்டிவிட்டுச் சென்றனர்.
பிரபல வங்கியில் கொள்ளை முயற்சி
காஞ்சிபுரம்: தண்டலம் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஜன்னலை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று காலை(ஆக.8) வங்கியைத் திறக்கச் சென்ற ஊழியர் வங்கியின் ஜன்னல் கதவு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு அடையாளம் தெரியாத நபர்கள் வங்கிக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வங்கியின் அறைகளில் ஆவணங்களைத் தவிர வேறு எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வங்கி ஊழியர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். அத்தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வங்கியில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.