தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரஸால் வாழ்வாதாரத்தை இழந்த கீரை வியாபாரிகள்

காஞ்சிபுரம்:ஊரடங்கு உத்தரவு காரணமாக கீரை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் கீரை வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

Spinach farmers
Spinach farmers

By

Published : Apr 11, 2020, 10:51 AM IST

Updated : Jun 2, 2020, 4:48 PM IST

’கீரை வாங்கலையோ கீரை’ என்ற குரல் நமது கிராமங்களை இன்றும் அழகுப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. கீரை வகைகள் இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை என்பதுதான் நிதர்சனம். மூட்டு வலி வந்தால் இந்தக் கீரை சாப்பிடனும், இரும்புச் சத்துக்கு அந்தக் கீரை சாப்பிடு சரியா போயிடும்யா என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லும் வார்த்தை மருத்துவர்களை மிஞ்சிய நம்பிக்கையைத் தரும்.

காலங்கள் மாறிவிட்டன உணவுப்பொருட்களின் தேவைகள் குறையவில்லை. ஆனால், இந்த ஊரடங்கால் கீரை வியாபாரிகள் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுதான் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளைந்து கிடக்கும் கீரைகள்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கீரை உற்பத்தி செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் கீரை தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அரை கீரை, சிறு கீரை, தண்டு கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி கீரை, புளிச்ச கீரை, உள்ளிட்ட கீரை வகைகளை உற்பத்தி செய்து அதனை காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது, கரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளயே முடங்கி கிடக்கின்றனர். போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளதால் கீரைகளை அறுத்து விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருப்பதனால், வளர்ந்திருக்கும் கீரைகள் உரிய காலத்தில் அறுவடை செய்ய முடியாமல் அழுகும் நிலையில் இருக்கின்றன. பெரும்பாலானோர் கீரைகளை அறுத்து மாடுகளுக்கு இரையாக போடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அன்றாட வியாபாரத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வரும் கீரை வியாபாரிகள் எவ்வாறு இனி வரும் நாட்களை கடத்துவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கீரை வியாபாரிகள் கூறுகையில், "கரோனா வைரைஸ் காரணமாக உற்பத்தி செய்த கீரைகளை சென்னை போன்ற பெருநகர சந்தைகளுக்கு கொண்டுசெல்ல முடியாமல் தவித்து வருகிறோம். கோடை காலத்தில்தான் கீரை வகைகளை அதிகம் உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியும். இதில் வரும் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். நாங்கள் உற்பத்தி செய்த கீரைகளை வெளியூர்களுக்கு கொண்டுசென்று விற்பனை செய்ய அரசு வழிவகுக்க வேண்டும்.

வாழ்வாதாரத்தை இழந்த கீரை வியாபாரிகள்

ஊரடங்கு காரணமாக வெளியே செல்ல முடியாமல் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தரும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் எங்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசு முன்வந்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்" என்றனர்.

இதையும் படிங்க:ஈ.டிவி பாரத் செய்தி எதிரொலி: விருதுநகர் மக்களவை உறுப்பினர் பிரதமருக்கு கடிதம்!

Last Updated : Jun 2, 2020, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details