மத்திய அரசால் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பிரதமரின் விவசாய ஊக்க நிதித் திட்டம் (பி.எம். கிசான்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 3 தவணைகளாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் விவசாயிகளை கூடுதலாகச் சோ்க்கும் வகையில் சில தளா்வுகளை மத்திய அரசு வழங்கியதுடன், இதற்கான வலைதளத்தில் சில மாற்றங்களை செய்தது. இதை சாதகமாகப் பயன்படுத்தி தனியாா் கணினி மையங்கள் மூலம் இந்தத் திட்டத்தில் போலி பயனாளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் உண்மைத் தன்மையை அறிய காஞ்சிபுரம் மாவட்ட முழுவதும் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, காவல் துறையினா் இணைந்து செயல்பட்டு வருகின்றனா்.
இவா்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,521 விவசாயிகள் மட்டுமே தகுதி உடையவர்கள் என்பதும் 2 ஆயிரத்து 821 நபர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவா்களது வங்கிக் கணக்கிலும் ஊக்க நிதி செலுத்தப்பட்டதும் தெரியவந்தது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாத போலி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகையை பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்காக மாவட்டத்திலுள்ள வங்கிக் கிளைகளிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்தக் குழுவினா் போலி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து இதுவரை சுமாா் 28 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்னும் 30 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்ய கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
போலி பயனாளியின் வங்கிக் கணக்குக்கு இந்தத் திட்டத்திலிருந்து பணம் செலுத்தப்பட்டு, அதை அவா் எடுத்திருந்தால் அவரது மற்றொரு வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.