தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்ஸ்டாகிராம் இளம்பெண்ணும் படையப்பாவும்.. ஆடிப்போன காஞ்சிபுரம் போலீசார் - நடந்தது என்ன? - A young woman falsely Accused that

நள்ளிரவில் தன்னை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக போலீசாரிடம் இளம்பெண் அளித்தப் புகாரில், பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளன. மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அப்பெண் நாடகமாடியதாக தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 5, 2023, 11:03 PM IST

இன்ஸ்டாகிராம் இளம்பெண்ணும் படையப்பாவும்.. ஆடிப்போன காஞ்சிபுரம் போலீசார் - நடந்தது என்ன?

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே 4 பேர் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திடீர் திருப்பமாக, காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்பெண்ணே தன்னை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் அளித்தது போலீசாரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர், தன்னை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் நேற்று (பிப்.4) நள்ளிரவு புகார் அளித்துள்ளார்.

தனது தோழியை சந்திக்க நேற்று இரவு செங்கல்பட்டு ரயில்வே நிலையத்துக்கு வந்ததாகவும், அப்போது அங்கு ரயில் நிலையத்துக்கு வெளியே நின்ற 4 பேர் தன்னிடம் பேச்சு கொடுத்தபடியே, தன்னை காரில் கடத்திச்சென்று காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அப்புகாரில் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து அப்பெண்ணை போலீசார் செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினர். மேலும், செங்கல்பட்டு காவல் நிலையத்தில் இருந்து சம்பவம் நடந்த இடம் வரையிலான சிசிடிவி கேமரா காட்சிகள் போலீசாரால் தீவிரமாக ஆராயப்பட்டன. இதில் குறிப்பிட்ட இளம்பெண், வாலிபர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் செல்வது போலீசாருக்குத் தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த போலீசார் அப்பெண்ணிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

போலீசாரின் விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் பகுதியை சேர்ந்த 'சலீம்' என்பவரும், அப்பெண்ணும் மூன்று மாத காலமாக ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகவும், சலீம் திருமணம் செய்து கொள்வதற்காக தன்னை நேரில் வருமாறு அழைத்ததாகவும் தெரிவித்தார்.

இதன் ஒருபகுதியாகவே, செங்கல்பட்டு ரயில்வே நிலையத்துக்கு வந்ததாகவும், அங்கு ரயில்வே நிலையம் அருகே தனக்காக காத்திருந்த சலீமுடன் பைக்கில் மலையாங்குளத்திலுள்ள ஒரு வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து தன்னிடம் வைத்திருந்த தாலிக்கயிறை எடுத்து சலீமிடம் கொடுத்து 'இந்த தாலியை உடனே நீ எனக்கு கட்டு' எனக் கூறியநிலையில் சலீம் அதற்கு மறுத்ததாகவும் எனவே, இதனால் தான் சத்தமிட்டு அப்பகுதியில் இருந்தவர்களைக் கூட்டிக்கொண்டு காவல் நிலையம் வந்ததாகவும் அப்பெண் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதே நேரத்தில், அப்பெண்ணுக்கும் சலீமுக்கும் ஏற்பட்ட தகராறில் தான் அப்பெண் இவ்வாறு தன்னை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக புகாரளித்துள்ளார் என தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேற்படி போலீசாரின் விசாரணையில், மலையாங்குளம் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவர், தன்னை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றப் பார்த்ததாகவும், அவரைப் பழிவாங்கவே தான் இப்படி நாடகமாடியதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அப்பெண் கூறிய சலீம் என்பவரை காவல்நிலையம் அழைத்து வந்த போலீசார் அவரிடம் விசாரித்ததில், அவருடைய நிஜப்பெயர் 'படையப்பா' என்று தெரியவந்துள்ளது. இவர் பல போலிப் பெயர்களில் இன்ஸ்டாகிராமில் பதிவுகளிட்டு வந்துள்ளார். இந்த படையப்பா என்பவரின் தந்தை தீவிர ரஜினி ரசிகர் என்பதும், படையப்பா படம் ரிலீசான நேரத்தில் இவர் பிறந்ததால் இவருக்கு படையப்பா என இப்பெயர் வைக்கப்பட்டதாம்.

அந்த வகையில் 'சலீம்' என்ற பெயரில் குறிப்பிட்ட அப்பெண்ணுடன் இவருக்கு இன்ஸ்டாகிராம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக அந்தப் பெண்ணை வரவழைத்து தனது இருசக்கர வாகனத்திலேயே மலையாங்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினாரா? (அ) பணப் பிரச்னையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது அந்தப் பெண் உண்மையில் இன்ஸ்டாகிராம் மூலமாக படையப்பா (எ) சலீமுடன் ஏற்பட்ட தொடர்பின் அடிப்படையிலும், அவரது அழைப்பின் பேரிலும் மலையாங்குளம் வந்ததாகக் கூறப்படுகிறது.

அங்கு அவருடன் உல்லாசமாக இருந்த பிறகு, அப்பெண் கேட்ட பணத்தை படையப்பா (எ) சலீம் கொடுக்காததால் இருவருக்கும் இடையே வாக்குவாதமாகி அப்பெண்ணை படையப்பா (எ) சலீம் தாக்கியதாக, அவரே போலீசாரிடத்தில் தெரிவித்துள்ளார். எனவே, அவரை மாட்டி விடுவதற்கு வேறு வழி ஏதேனும் இருக்கிறதா என்றிருந்த அப்பெண், தன்னை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக பொய்யான புகாரை அளித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து படையப்பா (எ) சலீம் மீது பெண்ணைத் தாக்கியது, வன்கொடுமை செய்தது உட்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சாலவாக்கம் போலீசார் இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (பிப்.5) செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர், 'காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே 4 பேர் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், புகார் அளித்த பெண்மணி பொய் புகார் அளித்துள்ளதாகவும், காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அப்பெண் இவ்வாறு தன்னை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பெண், அந்நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவ்வாறு எவ்வித சம்பவமும் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளதாக கூறினார். மேலும், அப்பெண் பொய் புகார் கொடுத்ததும், அவர் காவல்துறையிடம் நாடகமாடியதும் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அம்பலமானதாக’ தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கத்திமுனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை சுட்டுப் பிடித்த போலீஸார்!

ABOUT THE AUTHOR

...view details