கோடை காலத்தில் கலை கட்டும் திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்களால் பூ வியாபாரிகளின் வாழ்க்கை செழிப்படையும். பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைத்துப் பார் என்பார்கள். பலரது வாழ்க்கையை மலரவைக்கும் பூ வியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதுதான் வேதனையளிக்கிறது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக, மல்லிகைப் பூக்கள் மொட்டிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கூரம், வதியூர், கீழ் வெண்பாக்கம், மேல் வெண்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் மல்லிகைப் பூ, கனகாம்பரம், விரிசிகை போன்ற பூ வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பயிரிடப்படும் பூ வகைகளை காஞ்சிபுரம், சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர். தற்போது கோயில் திருவிழாக்கள், கல்யாண நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும் என்பதால், இங்கு விளையும் பூக்களை வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள்.
ஆனால், தற்போது கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மல்லிகைப் பூ, கனகாம்பரம், விரிசிகை பூக்களை யாரும் வாங்குவதற்கு வருவதில்லை. சாகுபடி செய்த பூக்களைச் செடியில் இருந்து பறித்து ஊர் ஊராகச் சென்றும் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சீசனில் பூ சாகுபடியை நம்பி நகைகளை அடகு வைத்து, விவசாயம் செய்த விவசாயிகள் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.