கள்ளக்குறிச்சி அருகேவுள்ள புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (31). இவருடைய உறவினர் செல்வம் (38). இருவரும் காய்கறிகளுடன் மதுபாட்டில்களை கடத்தி வந்து, புது உச்சிமேடு கிராமப் பகுதியில் விற்பதாக, வரஞ்சரம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதுகுறித்து ராஜ்குமார், செல்வம் ஆகிய இருவரிடமும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (ஜூன்.10) கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை ராஜ்குமாரும், செல்வமும் கடத்தி வருவதாக, மீண்டும் வரஞ்சரம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்தில் இருவரையும் நோட்டமிட்டனர். அப்போது, புது உச்சிமேடு கிராம காட்டுக் கொட்டகைப் பகுதியில் வாகனத்திலிருந்து மதுபாட்டில்களை இறக்கி, வைக்கோல் போட்டு மூடி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜ்குமார், செல்வம் ஆகியோரை காவலர்கள் பிடித்தனர்.
கைதானவர்களிடம் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரத்து 168 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக வழக்குப்பதிவு செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.