கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே 17 வயது மதிக்கத்தக்க சிறுவன், சிறுமி இருவர், அரசு பள்ளியில் ஒன்றாக 12ஆம் வகுப்பு படித்துவந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. சிறுவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடந்த சில நாள்களுக்கு முன்னர் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் 21ஆம் தேதி தனது மகளைக் காணவில்லை என சிறுமி தரப்பினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியைத் தேடிவந்துள்ளனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கோமுகி ஆற்றில் சிறுமி ஒருவரும், அதற்கு அருகில் உள்ள மரத்தில் சிறுவர் ஒருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால் தலைமையிலான காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். காதலித்து வீட்டைவிட்டு வெளியேறிய சிறுவர், சிறுமி ஆகியோர் உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பாலியல் தொல்லை - பள்ளியில் மாணவி தற்கொலை முயற்சி