கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65), கூலித் தொழிலாளி. இவருக்கு கவுண்டமணி (வயது 30) மற்றும் செந்தில் (வயது 28) என இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்பிரமணிக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் மனமுடைந்த சுப்பிரமணி கோபித்துக் கொண்டுத் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அதன் பின்னர் வெகு நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரைப் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இருப்பினும், சுப்பிரமணி பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை. இதற்கிடையே தியாகதுருகம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் முதியவர் சடலம் ஒன்று சற்று அழுகிய நிலையில் கிடந்ததை, அவ்வழியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்துள்ளனர். பின்னர் இது பற்றி தியாகதுருகம்
வனத்துறையினருக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் சடலமாக கிடந்த முதியவர் உடலைப் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அடையாளம் காண முயற்சி செய்தனர். காவல் துறையின் விளம்பரத்தைக் கண்ட மகன்கள் காணாமல் போன தங்களது தந்தை சுப்பிரமணி உருவமும் உயிரிழந்து கிடந்த முதியவரின் உடல் அமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்ததால் இறந்தவர், தனது தந்தை தான் என கவுண்டமணியும், செந்திலும் முடிவு செய்தனர்.
மேலும் தாய், சகோதரி மற்றும் உறவினர்களுக்குத் தங்களது தந்தை இறந்துவிட்டதாக அவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் கவுண்டமணியும், செந்திலும் தியாகதுருகம் காட்டுப்பகுதிக்கு சென்று அங்கு கிடைக்கப்பெற்ற இறந்தவரின் உடலை ஒரு மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு, நெடுமானூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து வந்தனர். மேலும் சுப்பிரமணி மனைவி, மகள் உறவினர்களும் சுடுகாட்டுக்கு வந்தனர்.