கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலுர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்டது நாச்சியார்பேட்டை கிராமம். சமீபத்தில், கிராம ஊராட்சியின் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஊராட்சி மன்றத் தலைவராக சந்தானம் சக்திவேல் என்பவர் வெற்றிபெற்றார். மேலும், ஆறு ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் வெற்றிபெற்றனர்.
இந்த நிலையில், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, வார்டு உறுப்பினர்கள் கணேசன், ராஜேந்திரன் ஆகிய இருவரும் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டனர்.
தேர்தல் ஒத்திவைப்பு
கணேசனுக்கு ஆதரவாக இரண்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் ஆதரவு அளித்தனர். இதனால் கணேசன் நான்கு வாக்குகள் பெற்று வெற்றிபெற வாய்ப்பு இருந்த நிலையில், ராஜேந்திரன் ஆதரவாளர்கள் (இருவர்) துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்களிப்பில் பங்கேற்காததால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று துணைத்தலைவர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காகத் தேர்தல் நடத்தும் அலுவலரும், திருநாவலூர் வட்டார வளர்ச்சித் துறை அலுவலருமான பாலமுருகன் வந்திருந்தார். அப்போது, கணேசன், பிற இரண்டு வார்டு உறுப்பினர்கள், தலைவர் என நான்கு பேர் வாக்களிக்க இருந்தனர்.
மல்லுக்கட்டிய மக்கள்
தொடர்ந்து, ராஜேந்திரன் உள்ளிட்ட மூன்று வார்டு உறுப்பினர்கள் நேற்றும் (நவம்பர் 29) வராததால் தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன் கூறினார். இதனால், ஆத்திரமடைந்த தலைவர், வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் அனைவரும் தேர்தல் நடத்தும் அலுவலரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதற்காகத் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன் காரில் ஏறினார். அப்போது அந்தக் காரை வழிமறித்த கிராம மக்கள் காரின் முன்பாகச் சாலையில் படுத்து தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.
தொடர்ந்து முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துத் தள்ளி அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். அப்போது காவல் துறையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறைப்பிடிக்கப்பட்ட அலுவலர்
தொடர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்தப் போராட்டம் காரணமாக காருக்குள்ளேயே தேர்தல் நடத்தும் அலுவலரை கிராம மக்கள் சிறைப்பிடித்தனர். அதன்பின், காவல் துறையினர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடத்தும் அலுவலரை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் நாச்சியார்பேட்டை கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தேமுதிக!